வாடகைத் தாய்மார்கள்!  ஏன் இந்த நிலை?

திருமணமாகி சில ஆண்டுகள் கடந்தும் குழந்தை பிறக்காததால், கணவனும் மனைவியும் சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையை நாடுகின்றனர். மனைவியின்
வாடகைத் தாய்மார்கள்!  ஏன் இந்த நிலை?

திருமணமாகி சில ஆண்டுகள் கடந்தும் குழந்தை பிறக்காததால், கணவனும் மனைவியும் சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையை நாடுகின்றனர். மனைவியின் கருப்பை நல்ல நிலையில் உள்ளது. இயற்கை முறையில் கரு தரிக்கா விட்டாலும் செயற்கை முறையில் கரு தரிக்க வைக்கலாம், இதற்குச் சம்மதமா? என்று மருத்துவர்கள் கேட்கின்றனர். தம்பதிகளுக்கு மகிழ்ச்சி. ஆனால், அதற்காக ஆகும் செலவு இரண்டு லட்சம் ரூபாய் என்று தெரிந்தவுடன் அவர்கள் மகிழ்ச்சி காணாமல் போய்விடுகிறது. அவர்கள் ஏழைகள், சாலையோரத்தில் கடை வைத்து பிழைத்து வருபவர்கள்.

அவர்களிடம் பணம் இல்லை என்று தெரிந்தவுடன் மருத்துவமனை இடைத்தரகர்கள், அவர்களுக்கு வேறு ஒரு வழி உள்ளது என்று கூறி, "வாடகைத்தாய்' முறையைக் கூறுகின்றனர். "இதன்மூலம் வேறு ஒரு தம்பதியினரின் கருமுட்டையைச் சுமந்து ஒரு குழந்தை பெற்றுக்கொடுத்தால் இரண்டு லட்சம் பணம் கிடைக்கும். அதைக்கொண்டு இரண்டாவதாக நீங்கள் உங்கள் சொந்தக் குழந்தையை டெஸ்ட்டியூப் மூலம் பெற்றுக்கொள்ளலாம்'.

இந்தத் திட்டம் ஏழைத் தம்பதிக்கும் ஏற்புடையதாக இருந்தது. அவர்கள் சம்மதித்தனர். முதல் குழந்தை ஆண். அது இப்போது எந்த நாட்டில் வளர்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது. அந்தக் குழந்தையை அவர்கள் கண்ணால் பார்க்கவும் இல்லை.

ஆனால், சொன்னபடி பணம் கிடைத்து, இவர்கள் தங்கள் சொந்தக் குழந்தையை இரண்டாவதாகப் பெற்றுக்கொண்டனர். இந்த நிலையில் குழந்தையை வளர்க்க மீண்டும் பணம் தேவைப்பட்டதால், அந்தத் தாய் மீண்டும் வாடகைத் தாயாக மாறி, ஒரு ஐரோப்பிய தம்பதியினருக்கு குழந்தை பெற்றுக்கொடுத்து ரூபாய் மூன்று லட்சம் சம்பாதித்தாள். தவிர குழந்தை  பிறக்கும் காலம் வரை போஷாக்கு அலவன்ஸýம் உண்டு. இது நடந்தது குஜராத்தின் ஆனந்த் நகர் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன். இச்செய்தி அப்பகுதியில் இருந்த மற்ற பெண்களிடமும் பரவியது.

2001ஆம் ஆண்டில்தான் இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் முதல் குழந்தை பிறந்தது.

2008இல், ஜப்பானில் 61வயதான தாய், தன் 29வயது மகளுக்காக வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்றுக்கொடுத்தார். 2014இல், லண்டனில் மகளுக்குத் தன் கருப்பையை தானம் செய்து பேத்தி பிறக்க உதவினார் ஒரு பெண்மணி. இதுபோன்ற சில நிகழ்வுகள் சென்னையிலும் நடந்திருக்கின்றன.

சுமார் இரண்டரை லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட குஜராத் ஆனந்த் நகரில், 5 ஆயிரம் குடும்பங்கள் இந்தத் துறையில் உள்ளனர். இவர்கள் மூலம் சுமார் ஒரு லட்சம் பேர் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர். ஆனந்த் நகரைச் சுற்றி 25 கிராமங்கள் உள்ளன. வாடகைத் தாயைத் தேர்வு செய்தல், மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்தல், குழந்தை பிறக்கும்வரை பராமரித்தல் என ஆண்டு ஒன்றுக்கு 900 கோடி முதல் ஆயிரத்து நானூறு கோடி ரூபாய் வரை பணம் புழங்கும் ஒரு லாபகரமான தொழிலாகவே இந்தத் துறை மாறி வருகிறது. 

கடந்த பத்தாண்டுகளில், பல செயற்கைக் கருவூட்டல் மையங்கள், வெளிநாட்டினர் தங்குவதற்கான சொகுசு விடுதிகள், சிறு, குறு, பெரு உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் என மாபெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது ஆனந்த் நகர். வாடகைத்தாய்மார்களால் எங்கள் சம்பாத்தியமும் அதிகரித்திருக்கிறது என்று ஆட்டோக்காரர்கள்கூட மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார்கள்.

பேறு கால பிரத்யேக ஆடைகள் தயாரித்து வருமானம் பார்க்க, பட்டேல் கிளினிக் பகுதியைச் சுற்றிலும் எழுநூறுக்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் தோன்றியுள்ளனர். குழந்தைகளுக்கான பொருட்கள், பிரஸ்ட் பம்ப்ஸ் போன்ற சாதனங்கள் விற்பனை மூலம் ஆண்டொன்றுக்கு ரூபாய் 1.5 கோடி வரை வருமானம் ஈட்டுகின்றனர்.  

அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ ஒரு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஆகும் செலவு குறைந்த பட்சம் ரூபாய் 35 லட்சம். இதே பணத்திற்கு குஜராத்தில் 7 வாடகைத்தாய்மார்கள் கிடைக்கிறார்கள். இதனால்தான் வெளிநாட்டினர் இங்கு அதிகம் வருகின்றனர்.

மொத்தத்தில் இந்தத் தொழிலில், வாடகைத் தாய்கள், பல நிபந்தனைகளுக்கு உள்பட்டு குழந்தையை உற்பத்தி செய்யும் கருவிகளாகவும், குழந்தைகள் விற்பனைப் பொருள்களாகவும் ஆகி விட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், அதேசமயம், "குழந்தை பிறக்கும் தகுதியற்ற மலடி' என்று கணவன் வீட்டாரிடம் பட்டம் சுமந்த சில பெண்கள், வாடகைத் தாயாக மாறி, தன் தாய்மையை மெய்ப்பித்துக்காட்டி, கணவன் வீட்டாருடன் மீண்டும் இணைந்த சம்பவங்களும் இங்கு நடந்திருக்கின்றன.  

குஜராத்தில், ஒரு பெண் குறைந்தது 6 முறையாவது வாடகைத் தாயாக கருவை சுமக்கிறாள். இதில் நார்மல் டெலிவரிக்கு அனுமதிப்பது இல்லை. காரணம், குழந்தை எந்த சிரமமும் இல்லாமல் வெளிவர வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர். ஒருமுறை தாய்லாந்திலிருந்து வந்த தம்பதிக்காக குழந்தை பெற்றுத் தருகையில், வாடகைத் தாய்க்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தை மூளை வளர்ச்சி இல்லாதது என்று கண்டுபிடிக்கப்பட்டதும் அக்குழந்தையை வாடகைத் தாயிடமே ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

"அன்று, வெள்ளையர்கள் நம்மை அடிமைப்படுத்தி 250ஆண்டுகளாக நம் ரத்தத்தை உறிஞ்சினார்கள். ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தில் ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் கொல்லப்பட்டனர். இன்று ஐரோப்பிய தம்பதிகளின் கருவைச் சுமந்து ஒரு இந்திய வாடகைத்தாய் குழந்தை பெற்றுக் கொடுக்கிறாள். இது வேறு வகையான சுரண்டல்.

இன்னும் பத்து, இருபது ஆண்டுகளில் இந்திய வாடகைத்தாய்கள் பெற்றெடுத்த குழந்தைகள் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பரவியிருப்பார்கள். பெற்றுக் கொடுக்கும் குழந்தைகளின் முகம் காணவும் உரிமையற்ற தாயை "வாடகைத்தாய்' என்பதை விட "தியாகத்தாய்' என்பதே பொருந்தும்' என்கிறார் குஜராத் ஆனந்த் நகரில் வசிக்கும் ஒரு சமூக ஆர்வலர்.

கடந்த சில ஆண்டுகளில் குஜராத்தில் சுமார் 30,000 குழந்தைகளை வெளிநாட்டவருக்கு பெற்றுக் கொடுத்து இருக்கிறார்கள் ஆனந்த் நகரத்துப் பெண்கள். இதில் பல லட்சம் டாலர்கள் பணம் குஜராத்துக்கு வந்துள்ளது. இதில் அதிகம் பயனடைந்தது மருத்துவமனைகள் அடுத்தபடியாக இடைத்தரகர்கள்தானாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com